கரோனா வைரஸ் தொற்றில் இருந்து தடுப்பதற்கு, கை சானிடைசர் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவதால், விமானங்களில் பயணிக்கும் பயணிகள் கை சானிடைசர், முகக்கவசம் போன்றவற்றை தங்களுடன் எடுத்து வரவேண்டும் என விமானத்துறை சார்பில் அறிவித்துள்ளது. மேலும் ஒருவர் கை சானிடைசர் 350 மி.லி. வரை தங்களுடன் எடுத்துச்செல்லலாம் எனவும் விமானத்துறை தெரிவித்துள்ளது.
நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அதிக அளவு முகக்கவசம், கை சானிடைசர் போன்றவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வந்தாலும்; வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் நபர்கள், தங்கள் சொந்த ஊருக்குச் செல்லவே அதிகம் விரும்புகின்றனர்.
அதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு, சில விமான சேவைகளை தொடங்குமாறு விமானத்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளது. அதன்படி விமான சேவை தொடங்க இருக்கும் சூழலில், விமானங்களில் பயணிக்கயிருக்கும் பயணிகள் தங்களுடன் கண்டிப்பாக முகக்கவசம், கை சானிடைசர் போன்றவற்றை தங்களுடன் எடுத்து வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி (பி.சி.ஏ.எஸ்) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 'இந்த நடைமுறை மே 13ஆம் தேதி முதல் மூன்று மாதங்களுக்குப் பின்பற்றப்படும்’ எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக தண்ணீர் உள்பட எந்த ஒரு திரவங்களும் விமானத்தில் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வீட்டுவசதி துறைக்கு ரூ. 70 ஆயிரம் கோடி!