இந்திய இறையாண்மைக்கும் இந்தியர்களின் தனியுரிமைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி மத்திய அரசு 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. மத்திய அரசால் தடை செய்யப்பட்ட இந்த 59 செயலிகளும் இந்தியர்கள் மத்தியில் பிரபலமானவை.
இந்த 59 செயலிகளும், 2014ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் 490 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக சென்சார் டவர் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, இந்தியாவில் மிகவும் பிரபலமான டிக்டாக், தனது மொத்த பதிவிறக்கங்களில் சுமார் 30 விழுக்காட்டை இந்தியாவிலிருந்தே பெற்றுள்ளது. அதாவது, இந்தியாவில் மட்டும் டிக்டாக் செயலி சுமார் 61.1 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. பதிவிறக்கம் மட்டுமின்றி, டிக்டாக் செயலியிலுள்ள பெரும்பாலான ஆக்டிவ் யூசர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் சென்சார் டவர் தெரிவித்துள்ளது.
எவ்வாறு தடை செய்யப்பட்டது?
இந்திய தகவல் தொடர்பு சட்டம் பிரிவு 69Aஇன் கீழ், இந்த 59 செயலிகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த தடை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும்?
மத்திய அரசின் உத்தரவை பெற்றவுடன் கூகுள் (ஆண்ட்ராய்டு) மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள், தடைசெய்யப்பட்ட 59 செயலிகளையும் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் iOS ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கிவிடும். முன்னதாக செவ்வாய்கிழமை காலை, இரு ஆப் ஸ்டோர்களிலிருந்தும் டிக்டாக் அகற்றப்பட்டது.
மேலும், இந்த செயலிகளுடனான அனைத்து தரவு போக்குவரத்தையும் தடுக்க அரசு, ஏற்கனவே இந்திய இணைய சேவையை வழங்கும் Indian internet service providers என்ற அமைப்புடனும் தொலைதொடர்பு சேவையை வழங்கும் telecom service providers என்ற அமைப்புடனும் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறது. இந்த செயல்பாடுகள் அனைத்தும் நல்ல விதமாக முடியும் பட்சத்தில், இந்த செயலிகள் இந்தியாவில் முற்றிலும் செயல்படாது.
இதையும் படிங்க: இந்திய நிறுவனங்களில் இருக்கும் சீன முதலீடுகள் - அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கடிதம்!