இந்த மாதத்தின் ஆரம்பத்தில் 2021-21க்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்யும்போது, மத்திய அரசு 15ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டதாக அறிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசும், மாநில அரசுகளும் பகிர்ந்துகொள்ளும் வரிப் பொதுச்சேர்மத்திலிருந்து 41 விழுக்காடு மாநிலங்களுக்கும், மீதமிருக்கும் 59 விழுக்காடு மத்திய அரசுக்கும் சென்று விடுவதாகக் கூறினார்,
இந்த 41 விழுக்காட்டுப் பங்கிலிருந்து 'கிடைமட்ட பகிர்வு விதிமுறை’யைப் பின்பற்றி மாநிலங்களுக்கிடையே நிதிஒதுக்கீடுகள் செய்யப்படும் என்று நிதி ஆணையம் பரிந்துரைத்திருக்கிறது என்று பட்ஜெட் ஆவணங்கள் தெரிவித்தன.
இந்த விதிமுறையின்படி, தென்னிந்தியாவிலேயே ஆந்திரப் பிரதேசத்திற்கு ஆகயுயர்ந்த பங்கு (4.047%) கிடைக்கிறது. இந்த உபபொதுச் சேர்மத்தில் மிகவும் குறைவான பங்கு (1.925%) கேரளாவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
என்.கே. சிங்கின் தலைமையிலான 15ஆவது நிதி ஆணையம் தனது அறிக்கையை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்திடம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சமர்ப்பித்தது. அதன் பரிந்துரைகள் வருகின்ற 2021 ஏப்ரல் மாதம் தொடங்கி ஐந்து ஆண்டுகள் காலத்திற்கு மத்திய, மாநில அரசுகளின் நிதி உறவில் ஆட்சி செலுத்தும்.
இந்த விவகாரத்தில் அதிகமான புரிதல் இல்லாதவர்களுக்காக பின்வரும் தகவல் தரப்படுகிறது. தேசத்தின் வரிவசூல்கள் எப்படி மத்திய, மாநில அரசுகளுக்கிடையே பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும் என்று நிதி ஆணையம் குடியரசுத்தலைவருக்குத் தன் பரிந்துரைகளைச் சொல்ல வேண்டும் என்று நமது அரசியல் சட்ட அமைப்பில் இருக்கும் ஒரு ஷரத்து. பகிரப்படக்கூடிய வரிகளின் பொதுச்சேர்மத்தில் வருமான வரி, மாநகராட்சி வரி, சுங்கத் தீர்வைகளும் அடங்கும்.
கிடைமட்டப் பகிர்வு விதிமுறை
நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, பகிரப்படக்கூடிய பொதுச்சேர்மத்திலிருந்து செய்யப்படும் கிடைமட்டப் பகிர்வு என்பது மாநிலத்தின் தேவை, விகிதப்பங்கு, செயற்பாடு ஆகிய விதிமுறையின் கீழ் கணக்கிடப்படுகிறது. மக்கள்தொகைக்கும், ஏரியா பரப்பளவுக்கும் தலா 15 விழுக்காடு வெயிட்டேஜ் கொடுக்கப்படுகிறது. அதைப்போல காடு, சுற்றுச்சூழல் ஆகியவற்றிற்கு 10 விழுக்காடும், வரி மற்றும் நிதி திரட்டும் முயற்சிகளுக்கு 2.5 விழுக்காடும் கொடுக்கப்படுகின்றன. 'வருமானத் தொலைவு’ என்பதற்கு ஆகயுயர்ந்ததாய் 45 விழுக்காடு வெயிட்டேஜ் கொடுக்கப்படுகிறது.
கிடைமட்டப் பகிர்வு
தேவை, விகிதப்பங்கு, செயற்பாடு ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த வரிப்பகிர்வு விதிமுறை பின்வருமாறு:
அளவுகோல் | வெயிட்டேஜ் (%) |
மக்கள் தொகை | 15.0 |
ஏரியா | 15.0 |
காடு மற்றும் சுற்றுச்சூழல் | 10.0 |
வருமானத் தொலைவு | 45.0 |
வரி மற்றும் நிதி முயற்சிகள் | 2.5 |
மக்கள்தொகை சார்ந்த செயல்பாடு | 12.5 |
மொத்தம் | 100 |
ஒரு மாநில வருமானத்தின் அடிப்படையில் மிக அதிப்படியான வருமானம் கொண்ட மாநிலத்திலிருந்து எவ்வளவு தூரம் தள்ளியிருக்கிறது என்பதைப் பொறுத்து வருமானத் தொலைவு கணக்கிடப்படுகிறது.
மாநிலங்களின் தற்காலத் தேவையை 2011-ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்குத் தரவுகள்தான் சரியாகப் பிரதிபலிக்கின்றன என்ற நிஜத்தை ஒத்துக்கொண்டது நிதி ஆணையத்தின் அறிக்கை. அதனால் மக்கள்தொகை விஷயத்தில் நன்றாகச் செயல்பட்ட மாநிலங்களைக் கெளரவப்படுத்தவும், அவற்றிற்கான நியாயத்தை வழங்கவும், ஆணையம் மக்கள்தொகை சம்பந்தமான செயல்பாட்டு அளவுகோலுக்கும் 12.5 விழுக்காடு வெயிட்டேஜ் கொடுத்திருக்கிறது.
சரியான கோணத்தில் வைத்துப்பார்த்தால், பரிந்துரைகளை வழங்குவதற்கு 2011இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்குத் தரவுகளைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று ஆணையத்திற்குத் தெளிவான ஆய்வு வரையறைகள் (டேர்ம்ஸ் ஆஃப் ரெஃபெரன்ஸ்) கொடுக்கப்பட்டிருந்தன.
முந்தைய 14ஆம் நிதி ஆணையம் 1971ஆம் ஆண்டு மக்கள்தொகையைப் பயன்படுத்தியது; நிதிப் பகிர்வுக்கு 2011ஆம் ஆண்டை அடிப்படையாகப் பயன்படுத்திக் கொண்டது. மக்கள்தொகை அளவுகோலுக்கு இரண்டு ஆண்டுகளிலும் முறையே 17.5 விழுக்காடு, 10 விழுக்காடு வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டது என்பதைக் குறிப்பிடுவது இங்கே பொருத்தமாக இருக்கும்.
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த மாநிலங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு அங்கீகாரமும் கெளரவமும் கொடுப்பதற்கு மக்கள்தொகை சம்பந்தமான செயல்பாட்டு அளவுகோல் பயன்படுத்தப்படுகிறது.
இந்த அளவுகோலின்படி, குறைவான மொத்த கருத்தரிப்பு விகிதம்(TFR) கொண்ட மாநிலங்கள் நிறைவான மதிப்பெண் பெற்றன. டிஎஃப்ஆர் என்னும் மொத்த கருத்தரிப்பு விகிதம் என்பது மொத்த மக்கள்தொகையில் ஒவ்வொரு பெண்ணும் பெற்ற குழந்தைகளின் சராசரி எண்ணிக்கையைக் குறிக்கிறது.
கிடைமட்ட பகிர்வும், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்களிப்பும்:
2018-19 நிதியாண்டிற்கான அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, ஐந்து தென்னிந்திய மாநிலங்கள் ஒன்றுசேர்ந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 30 விழுக்காடுப் பங்கை அளிக்கின்றன. ஆந்திரப் பிரதேசம் 4.55% அளிக்கிறது; கர்நாடகம் 8.14 %; கேரளா 4.12 %; தமிழ்நாடு 8.59 %; தெலங்கானா 4.54 %.
அதே சமயம், மாநிலங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வரிச்சேர்மத்திலிருந்து கிடைமட்ட பகிர்வு விதிமுறையின்படி, ஆந்திரப் பிரதேசத்திற்கு 4.047 விழுக்காடும், கர்நாடகத்திற்கு 3.647 விழுக்காடும், கேரளாவிற்கு 1.925 விழுக்காடும், தமிழ்நாட்டிற்கு 4.079 விழுக்காடும், தெலங்கானாவிற்கு 2.102 விழுக்காடும் கிடைக்கின்றன.
உச்சலாபம் பெறும் மாநிலங்கள்
இந்த வரிவருமானப் பகிர்வில் அதிக லாபம்பெறும் மாநிலங்கள் உத்தரப்பிரதேசமும் பீகாரும்தான். 15ஆவது நிதி ஆணையம் இந்தியாவிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்திற்கு 17.93 விழுக்காடு கொடுக்க பரிந்துரை செய்திருக்கிறது. இரண்டாவதாக பீகாருக்கு 10.05 விழுக்காடுப் பங்கு கிடைக்கிறது. இந்த இரண்டு மாநிலங்கள்தான் இந்தியாவிலேயே இரட்டை இலக்கம் கொண்ட பங்கைப் பெறுகின்றன. அவை இரண்டும் சேர்ந்து மொத்தப் பங்கீட்டில் 28 விழுக்காட்டை எடுத்துக் கொள்கின்றன. 2018-19 தரவுகளின்படி, உத்தரப்பிரதேசம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.7 விழுக்காட்டுப் பங்களிப்பையும், பீகார் 2.8 விழுக்காட்டுப் பங்களிப்பையும் கொடுத்திருக்கின்றன.
(எழுதியவர் ஆர் பிரின்ஸ் ஜெபகுமார்)
இதையும் படிங்க: இனி தேர்தல் பணியாளர்களும் முன்களப்பணியாளர்கள்! - ராதாகிருஷ்ணன்