நாடாளுமன்றத்தில் 2019-20ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது அவர், 2018 முதல் 2030ஆம் ஆண்டுக்குள் ரயில்வே துறையில் கட்டுமானத்திற்காக ரூ. 50 லட்சம் கோடி அளவிலான முதலீடுகளுக்கான தேவை உள்ளது எனத் தெரிவித்தார். ரயில்வே கட்டமைப்பை விரைவாக மேம்படுத்தி ரயில் சேவை மேம்படுத்தப்படும் என்றும் புறநகர் ரயில் சேவையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அனைத்து விதமான ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்படும் என்று தெரிவித்த அவர், புதிதாக 300 கிமீ தொலைவிற்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவித்தார். இது தவிர ரயில், பேருந்து பயணத்திற்கு ஒரே அட்டையைப் பயன்படுத்தும் முறை அமல்படுத்தப்படும் என்றும், ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் புதிய திட்டம் இந்தாண்டு முதல் தொடங்கப்படும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.