கோவை ஆர்.ஜி. புதூர் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் சென்னையிலிருந்து கடந்த வாரம் கோவை வந்துள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த அவருக்கு கோவை வந்த பின்னர் காய்ச்சல், சளியால் அவதிப்பட்டார்.
இதனையடுத்து சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனையில் முழுமையான முடிவுகள் கண்டறியப்படவில்லை.
இதனையடுத்து மீண்டும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
கோவை மாவட்டத்தில் கரோனாவுக்கு உயிரிழந்த இரண்டாவது நபர் இவராவார். கரோனா வீரியம் அதிகரித்துள்ள நிலையில் 28 வயது இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இளைஞரின் இரண்டாவது பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே கரோனா வைரஸால் உயிரிழந்தாரா என்பதை உறுதிப்படுத்த முடியும் என அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் மருத்துவமனை ஆவணங்களில் கரோனா பாதிப்பு காரணமாகவே இளைஞர் இறந்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மணல் ஓவியம் மூலம் சுஷாந்த் சிங்கிற்கு மரியாதை!