நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகம், தத்தனூரைச் சேர்ந்தவர் கலியபெருமாள்(22). இவர் கூலித்தொழில் செய்து வருகிறார்.
இவரும், வடிவேல் என்பவரும் கடந்த 2ஆம் தேதி எரவாஞ்சேரி கிராமத்தில் நெப்போலியன் என்பவர் வயலில் வேலை செய்தபோது, அதே ஊரைச் சேர்ந்த ராமதாஸ் என்பவருக்கும், நெப்போலியனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது தகராறை தடுத்த கலியபெருமாளை ராமதாஸ் தரப்பினர், 'ஏன் எங்கள் ஊருக்கு வேலைக்கு வந்தீர்கள்' என்று கேட்டுத் தாக்கியுள்ளனர்.
இதில், காயமடைந்த கலியபெருமாள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இது தொடர்பாக இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துப் பேசி முடித்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று(ஜூலை 9) கலியபெருமாள் உடல்நிலை சரியில்லை என்று கூறி, மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அழைத்து வந்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கலியபெருமாள் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தாக்குதலில் காயமடைந்ததால் தான் கலியபெருமாள் உயிரிழந்தார் என்றும், அவரை தாக்கியவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் என்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்த மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் கொலை வழக்குப்பதிவு செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என்று கூறி, அவரது குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்துவிட்டனர்.
இதையும் படிங்க: வீடு தரைமட்டமானது... பெண் மரணம்! வீடு கட்டிக் கொடுத்ததாக பணத்தை உண்டு ஏப்பம் விட்ட அரசு அலுவலர்கள்!