இளம் வழக்கறிஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் 3,000 ரூபாய் வழங்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து, அதற்கு விண்ணப்பிக்கும் வழிமுறை, அதற்கான கல்வித் தகுதி உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்க தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது; "இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டுமென்ற பார்கவுன்சிலின் நீண்ட நாள் கோரிக்கையை பரிசீலித்து உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும், சட்டத்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள் என்னவென்றால் தமிழ்நாடு அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றிருக்க வேண்டும். தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும். 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பம் ஜூலை 6ஆம் தேதி முதல் பார் கவுன்சிலின் http://and.bctnpy.com என்ற இணையதளத்தின் மூலம் இளம் வழக்கறிஞர்கள் விண்ணப்பிக்கலாம். பதிவு செய்த ஒரு வார காலத்துக்குள் விண்ணப்பதாரரின் தகுதி குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட இளம் வழக்கறிஞரின் வங்கிக் கணக்கில் உதவித்தொகை கொண்டு சேர்க்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த அறிவிப்பு நலிந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மேம்பட்ட வழக்கறிஞர்களாக வர உதவும். கரோனா காலத்தில் இளம் வழக்கறிஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இது பேருதவியாக அமைந்துள்ளது.
இதன் மூலம் ஆண்டுதோறும் குறைந்தது 2,000 வழக்கறிஞர்கள் பயன்பெறுவர். அதேசமயம் ஜூலை 31 வரை தொடர்ந்து காணொலி மூலம் தான் உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் என்ற அறிவிப்பு வருத்தம் அளித்தாலும், நீதிபதிகள் அடங்கிய நிர்வாக குழுவிடம், நீதிமன்றத்தை திறந்து வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி வாதிட மீண்டும் கோரிக்கை வைக்கப்படும்" என்றார்.