சட்ட படிப்பை முடித்தவர்கள், பார் கவுன்சிலில் வழக்குரைஞர்களாக பதிவு செய்த பிறகுதான், நீதிமன்றங்களில் ஆஜராகி வழக்காட முடியும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், உலகளாவிய பெருந்தொற்றான கரோனா பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், பார் கவுன்சிலில் வழக்குரைஞர்களாக பதிவு செய்ய விண்ணப்பித்தவர்களுக்கு பதிவு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, காணொலி காட்சி மூலம் வழக்குரைஞர்கள் பதிவு நடத்த உத்தரவிடக் கோரி திருவாரூரைச் சேர்ந்த சட்ட பட்டதாரி ஹரிகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தகுந்த இடைவெளி உள்ளிட்ட கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக சட்ட பட்டதாரிகளுக்கு மொத்தமாக வழக்குரைஞர்களாக பதிவு செய்ய இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, காணொலி காட்சி மூலம் வழக்குரைஞர் பதிவு செய்யும் நிகழ்வை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "பார் கவுன்சிலில் பதிவு செய்திருந்தால் மட்டுமே அகில இந்திய தகுதித் தேர்வில் கலந்துகொள்ள முடியும். நீதிமன்ற விசாரணையே காணொலி காட்சி மூலம் நடத்தப்படும் நிலையில், கேரளாவை போல தமிழ்நாட்டிலும் காணொலி காட்சி மூலம் வழக்குரைஞர்கள் பதிவு நடந்தால் மனுதாரர் போல பல விண்ணப்பதாரர்கள் பயனடைவர்" என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கில் இந்திய பார் கவுன்சிலை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவுக்கு ஜூலை 27ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கும், இந்திய பார் கவுன்சிலுக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.