திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண தீபக் (26), முத்துச்செல்வி(23) இருவரும் உறவினர்களாக இருந்த நிலையில் நீண்ட நாள்களாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்து, அவரவர் வீட்டில், 'அலைபாயுதே' சினிமா பாணியில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தீபக்கின் வீட்டில் வசதியான இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்ததால் அவர் முத்துச்செல்வியை தவிர்த்து வந்துள்ளார்.
இதையடுத்து, முத்துச்செல்வி தனது திருமணம் குறித்து தாயாரிடம் தெரிவித்து உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் இருவருக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது, தீபக் முத்துச்செல்வியை அவதூறாகப் பேசியுள்ளார். இதில், மனமுடைந்த முத்துச்செல்வி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
உடனடியாக அவரை மீட்ட அலுவலர்கள், உறவினர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த வீரபாண்டி காவல் துறையினர், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:தெலங்கானாவைச் சேர்ந்த மாவோயிஸ்ட் செயற்பாட்டாளர் கைது!