இந்தியாவில் ஏழாவது தொழிற்சாலையைத் தொடங்கும் சியோமி இந்த புதிய தொழிற்சாலையைத் தமிழ்நாட்டில் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த புதிய தயாரிப்பு நிறுவனத்தை ஃபிளக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சியோமி தொடங்க உள்ளது.
இது குறித்து இந்தியாவின் சியோமி தலைமை அலுவலர் முரளி கிருஷ்ணா பேசுகையில், 'இந்தப் புதிய அலைபேசி தயாரிக்கும் தொழிற்சாலையை இந்தியாவில் ஃபிளக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்குவதில் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்துடன் இணைந்து பணியாற்றுவதால் இங்குள்ள மக்களின் விருப்பமுள்ள வடிவமைப்புடன் எங்களது கற்பனையும் கலந்து கொடுக்க முடிகிறது' எனத் தெரிவித்தார்
இந்தியாவில் ஏற்கனவே ஃபாக்ஸ்கான்(Foxconn), ஃபிளக்ஸ்(Flex), ஹைபேட்(HiPad) போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு இடங்களில் திறன்பேசி (Smart phone) தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றனர். மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட இந்த புதிய தொழிற்சாலையின் மூலம் இனி சியோமி நிறுவனத்தால் ஒரு வினாடிக்கு மூன்று அலைபேசிகளை உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது.
நேற்று டெல்லியில் ரெட்மி கோ அலைபேசி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த புதிய தொழிற்சாலை பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது. வெகுவிமரிசையாக நடந்த இந்த விழாவில் ரெட்மி கோ அலைபேசியையும், எம்ஐ-பே என்னும் இணைய பணப்பரிவர்த்தனை செய்யும் செயலியும் அறிமுகம் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.