சேலம் மாவட்டம், மல்லூர் அருகேயுள்ள ஆராங்கல்திட்டு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (55). இவரது கணவர் அய்யண்ணன் விவசாயம் செய்துவருகிறார். இந்த தம்பதிக்கு குழந்தையில்லாத காரணத்தால் தனது தங்கையை, அய்யண்ணனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு, சாலையோரத்தில் வீடுகட்டி ஆடு, மாடுகளை வளர்த்து அதில் கிடைக்கும் வருமானத்தில் லட்சுமி வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (செப்.18) லட்சுமி வீட்டருகே உள்ள வனப்பகுதியில் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதைக்கண்ட அப்பகுதியினர் மல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், லட்சுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். லட்சுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, பின்னர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கானிகேர் மூன்று தனிப்படை அமைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். லட்சுமி நகைக்காக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா என்று பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.