நாடு முழுவதும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் சூழலில், களத்தில் இறங்கி போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், காவலர்கள் உள்ளிட்டோருக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் மதிப்பு ஏற்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் பல இடங்களில் கரோனா ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்களுக்கு மக்கள் கௌரவம் செய்வதைப் பார்க்க முடிகிறது. இந்தச் சூழலில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களை நிரந்தரப்படுத்தக்கோரி திமுக பெண் உறுப்பினர் ஒருவர், நூதன முறையில் சாலையில் அமர்ந்து பிச்சை எடுத்து போராடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதாவது நெல்லை மாநகராட்சியில் 300க்கும் மேற்பட்ட தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், இதுவரை அவர்கள் நிரந்தரப்படுத்தவில்லை.
இந்தச் சூழலில், தற்போது கரோனா தொற்று ஒழிப்புப் பணியில், இந்த தற்காலிகப் பணியாளர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு உள்ளனர். எனவே, இக்கட்டான நேரத்தில் பொதுமக்களை பாதுகாக்கப் போராடும், இந்தத் தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்யக்கோரி, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக பெண் உறுப்பினர் சுப்புலட்சுமி நேற்று (ஜூன் 17) திடீரென நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்
அதன்படி அவர் சாலையில் துணி விரித்து கையில் பாத்திரம் ஏந்திய படி பிச்சை எடுத்தார். மேலும் தற்காலிக தூய்மைப் பணியாளர்களை நிரந்தரப்படுத்தும் ஆணையை உடனே நிறைவேற்றும்படி, கையில் பதாகையை ஏந்தி இருந்தார். இதை கவனித்த வாகன ஓட்டிகள், பாதசாரிகள் வியப்படைந்தனர்.