உலகளாவிய பெருந்தொற்றுநோயான கரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதத்திலிருந்து இந்தியாவில் மிகத் தீவிரமாக பரவிவருகிறது. அதன் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துப்பட்டுள்ளது.
மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த 144 தடையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல்வேறு துறைச் சார்ந்த தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்து கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக, புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள் தொழில்வாய்ப்பினை இழந்து பெரும் இன்னலுக்குள்ளாகி உள்ளனர்.
புதுச்சேரியை அடுத்துள்ள திருக்கனூர், புராணசிங்குபாளையம், வாதானூர், சோம்பட்டு, கூனிச்சம்பட்டு என, 20 கிராமங்களில் 2 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் வசிக்கின்றனர். புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கும் சென்று திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு சமையல் செய்து வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
கரோனா பரவலை தடுக்க அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கால் விழாக்கள், திருமணங்கள் உள்ளிட்டவை முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது. இதனால், சமையல் கலைஞர்கள் அதிகளவில் வசிக்கும் புராணசிங்குபாளையத்தில் சமையல் கலைஞர்கள் தமது குடும்பங்களோடு வறிய நிலைக்குள்ளாகி நிற்கின்றனர்.
சமையல் கலைஞர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்களின் கீழ், இவர்கள் வராததால் அரசின் நிவாரண உதவி தொகையும் கிடைக்கவில்லை என அறிய முடிகிறது. சமையல் கலைஞர்களும் அவரது குடும்பத்தினரும் அரசு தந்த விலையில்லா அரசியை வைத்து வெறும் கஞ்சிக் காய்ச்சி மட்டும் குடித்து வருகின்றனர்.
பொருளாதார ரீதியாக நலிந்துக் கிடக்கும் சமையல் கலைஞர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க புதுச்சேரி அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது.