திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட குருப்பனூர் பகுதியில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி முருகன். இவரது மகன் வெங்கடேசன் (30). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.
வெங்கடேசன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுகந்தி (26) என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். தற்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும், வெங்கடேசனுக்கு குடிப்பழக்கம் இருந்துவந்துள்ளது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் அவர் வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், குடிக்க பணம் இல்லாமல் அடிக்கடி மனைவியிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுப்பட்டுவந்தார். இந்நிலையில் , குடித்து விட்டு வீட்டிற்கு வந்த வெங்கடேசன் மேலும் மது குடிக்க அவரது மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சுகந்தி குடிபோதையில் இருந்த தனது கணவன் வெங்கடேசன் தலைமீது கல்லைப் போட்டுள்ளார். மேலும், ஆத்திரம் தாங்காத சுகந்தி, கத்தியை எடுத்துக் குத்தியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நிலையிலிருந்த வெங்கடேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
பின்னர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கிருந்து சேலம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, அவர் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.