திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கெளசல்யா, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரைக் கடந்த 2015ஆம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி, காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி கெளசல்யாவையும், அவரது கணவர் சங்கரையும், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது.
அதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் கெளசல்யா உயிர் தப்பினார். சிசிடிவி காட்சிகளில் பதிவான, இந்தப் படுகொலை தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் கெளசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு 2017 டிசம்பரில் திருப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அதை எதிர்த்து கௌசல்யாவின் பெற்றோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இவ்வழக்கில் நீதிபதிகள் சத்தியநாராயணன் , நிர்மல் குமார் அடங்கிய அமர்வு நேற்று (ஜூன் 22) தீர்ப்பு வழங்கியது.
அதில் கெளசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டார். மற்ற 5 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில், 'ஆணவக் கொலைகள் நம் சமுதாயத்தில் புரையோடியிருக்கும் நச்சுக்களின் அடையாளம். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது அரசின் கடமை. தமிழ்நாட்டையே உலுக்கிய கொலையில் A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லை என்பது யார் தவறு?' எனப் பதிவிட்டுள்ளார்.