போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான வேலூர் மாவட்டம் பொம்மிகுப்பத்தைச் சேர்ந்த விஜயகுமார் கைதான நிலையில், அவரை குண்டர் சட்டத்தில் அடைத்து, கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி சித்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பிரதாப்குமார், இந்த வழக்கில் தொடர்புடைய முதல் மற்றும் இராண்டாவதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் சகோதரர்கள் எனவும், அவர்கள் குடும்பத்தினருக்குச் சொந்தமான லாரியை கொண்டு சரக்குகளை கையாளும் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், போதைப் பொருள் கடத்தல் அதிகரிப்பது மற்றும் அதனால் சமூகம் சீரழிவதை முக்கிய விஷயமாக கருதுவதாகத் தெரிவித்ததுடன், இவ்வழக்கில் மத்திய மாநில அளவிலான போதைப் பொருள் தடுப்புப் பிரிவுகளை தாமாக முன்வந்து வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்த்தனர்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், தமிழ்நாடு உள்துறை செயலாளரும், போதைப்பொருள் தடுப்பு பிரிவும் கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- கேள்விகள் வருமாறு:
- போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை வழக்குகள் பதிவாகி உள்ளன?
- பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் இயல்பு, அளவு என்ன? அவை எப்படி அழிக்கப்படுகிறது?
- போதைப் பொருள் கடத்தலில் வெளிநாட்டவருக்கு தொடர்பு உள்ளதா?
- போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகத் தடுப்பு காவல் சட்டத்தில் எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன?
- அந்த வழக்குகளிலிருந்து எத்தனை பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்? எந்தக் காரணத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்?
- இதுபோன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்கள் என்ன பாதிப்புகளை சந்திக்கிறார்கள்? போதைப் பொருள் நுகருபவர்களால் என்ன குற்றங்கள் நடக்கின்றன?
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கடுமையான குற்றங்களில் ஈடுபடுகிறார்களா?
- போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்க மையங்கள் ஏதும் உள்ளதா?
- போதைப் பொருள் கடத்தலுக்கு வேலையில்லா திண்டாட்டம் தான் காரணமா? மாணவர்களும், இளைஞர்களும், இந்த கடத்தலில் ஈடுபடுகிறார்களா?
- போதைப் பொருள் கடத்தல் மையமாக இந்திய நாடு பயன்படுத்தப்படுகிறதா?
- கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் எங்கு விளைவிக்கப்படுகின்றன? அடர்ந்த காடுகளுக்கு உள்ளேயும் கண்காணிக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்துள்ள காலத்தில் காவல்துறையிடம் உள்ள ஆளில்லா கேமரா மூலம் கண்காணிக்கவோ, அவற்றை அழிக்கவோ ஏன் முடியவில்லை?
- போதைப்பொருள் கடத்தலில் சட்ட விரோத பணம் சம்பாதிப்பதைத் தவிர்த்து வேறு காரணங்கள் உள்ளனவா?
- போதைப்பொருள் கடத்தலை வேரறுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை என்ன?
- கடந்த 10 ஆண்டுகளில் போதைப் பொருள் கடத்தலில் எவ்வளவு தொகை ஈடுபடுத்தப்பட்டுள்ளது?
- போதைப்பொருள் தொடர்புடைய வழக்குகள் மற்றும் குற்றங்களை கையாள ஏன் தனிப்பிரிவை உருவாக்கக் கூடாது? என மத்திய, மாநில அரசுகள் இரண்டு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.