தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது, "கரோனா ஊரடங்கை பயன்படுத்தி, மத்திய அரசு, பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்காமலேயே, மறைமுகமாக அடுத்தடுத்து அவசர சட்டங்கள் பலவற்றை அறிவித்து வருகிறது.
அந்த வகையில், இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்க வழி செய்யும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை (EIA 2020) சட்டம். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை 2020, மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் உள்ளிட்டவற்றை திரும்ப பெற வேண்டும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கே வழங்க வேண்டும். மும்மொழி கொள்கையை எதிர்த்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறோம்” என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொகுதி செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்சி கொடிகளுடன் திரண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில், கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹமாயூன் கபீர், மாநில இளைஞர் பாசறை செயலாளர் மணி செந்தில், தொகுதி தலைவர் ஜெஸ்டின் தமிழ்மணி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.