12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், ஆஸ்திரேலியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்காவது லீக் போட்டி பிரிஸ்டோல் நகரில் நடைபெற்றது. இதில்,டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நஜிபுல்லாஹ் சட்ரான் 51 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பெட் கம்மின்ஸ், சாம்பா ஆகியோர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 208 ரன்கள் இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஃபின்ச், வார்னர் ஆகியோர் அணிக்கு நல்ல தொடக்கத்தை தந்தனர். இவ்விரு வீரர்களும் முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்ந்த நிலையில், அதிரடியாக ஆடிய ஃபின்ச் 66 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த உஸ்மான் கவாஜா 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும், மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வார்னர் - ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு மூன்று ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலையில் ஸ்டீவ் ஸ்மித் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த மேக்ஸ்வேல் தனது முதல் பந்துலேயே பவுண்டரி அடித்தார்.
இதனால், ஆஸ்திரேலியா அணி 34.5 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இப்போட்டியில் எழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் 89 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த வார்னர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.