தமிழ்நாட்டில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. கரோனா இரண்டாம் அலை பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சி ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை, பேருந்து நிலையம், பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணியுமாறு கைகளில் பலூன்களை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னதாக நகராட்சி அலுவலகத்திலிருந்து `முகக்கவசம் அணிவோம் கரோனாவை ஒழிப்போம்` என கோஷமிட்டவாறும்,
விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் கடை கடையாக சென்று கடை உரிமையாளர்கள், ஊழியர்கள், பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.
மேலும், புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைக்கு வரும் பொதுமக்களிடம் `முகக்கவசம் அணியாமல் வாரச்சந்தையில் செல்ல அனுமதி இல்லை கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்லுங்கள்` என வாரச்சந்தை வளாகம் மற்றும் நகர எல்லை பகுதியில் நின்று அறிவுறுத்தினர்.