நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கரோனா தொற்று பரவலை தடுக்க பொது விழாக்கள், பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி திருநாள் தொடர்பாக அரசின் விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து இந்து சமய பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
அப்போது மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் கூறுகையில், "தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் நலன் கருதி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவது, சிலைகளை வைத்து விழாக் கொண்டாடுவது, விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்வது சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது உள்ளிட்டவை அனுமதிக்க இயலாது. எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், பண்டிகையை கொண்டாட தேவையான பொருள்களை வாங்க கடைகளுக்குச் செல்பவர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும், தகுந்த இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும். சிறிய திருக்கோயில்களில் பொதுமக்கள் வழிபட அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில், வழிபடும்போது விதிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்குமாறு பொதுமக்கள், திருக்கோயில் நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.