விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள டி.குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்தர் (எ) சுரேந்திர குமார். கார்டூனிஸ்ட்டான இவர், நபிகள் நாயகத்தைத் தவறாகச் சித்தரித்து கார்டூன் படம் வெளியிடுவோம் என தொடர்ந்து சமூக வலைதளங்களில் தெரிவித்துவந்தார்.
இந்து மதக் கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டுவரும் ஒரு யூடியூப் சேனலுக்கு எதிராக, அவர் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதையடுத்து விழுப்புரத்தைச் சேர்ந்த ரியாஸ் அலி என்பவர் கொடுத்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் சுரேந்திர குமாரைக் கைதுசெய்தனர்.
இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இதுபோன்று குறிப்பிட்டு ஒரு சமூகத்தை அல்லது மதத்தைக் கேலி செய்யும் விதமாகவும், இழிவுபடுத்தக்கூடிய விதமாகவும் ஏதேனும் கேலி சித்திரம் அல்லது கருத்துக்கள் முதலியவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.