தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினரின் இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை பதிவுசெய்து வருகின்றனர்.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த அருண் பாலகோபாலன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அதேபோல், தென்மண்டல காவல் துறை தலைவராக இருந்த சண்முக ராஜேஸ்வரனுக்கு பதில், அப்பொறுப்பில் முருகன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த எஸ்.ஜெயக்குமார், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று மாலையுடன் விழுப்புரத்தில் இருந்து விடைபெற்றார். இதைத்தொடர்ந்து நாளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுபேற்க உள்ளார்.
கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக மாவட்ட மக்களின் நன்மதிப்பை பெற்று பணியாற்றிவந்த எஸ்.ஜெயக்குமாரின் இடமாற்றம், விழுப்புரம் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:விபத்தில் சிக்கிய குடும்பத்தைக் காப்பாற்றிய எஸ்பி! - பொதுமக்கள் பாராட்டு