திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த அலமாதியில் தனியாருக்கு சொந்தமான சேமியா தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு சேமியா தயாரிப்பு பணியில் சுமார் 100 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே கரோனா தொற்று ஊரடங்கால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிர்வாகம் உடனடியாக நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் காவல் துறையினர் நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.