தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நல வாரியங்களில் அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்வதற்கு மாவட்ட அளவிலான தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டி இருந்தது. இதனால் அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்வதற்காக மாவட்ட அலுவலகங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுவந்தது.
இந்த சிரமத்தை போக்குவதற்காக தொழிலாளர்கள், அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இணையதளம் மூலமாக https://labour.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 17 வாரியங்களிலும் தங்களது பெயர்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளும் வசதி, 19.06.2020 முதல் ஏற்படுத்தப்பட்டு 20.07.2020 முதல் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டுவருகிறது.
21.07.2020 வரை தமிழ்நாட்டில் 17 அமைப்புசாரா நல வாரியங்களில் 54ஆயிரத்து 255 தொழிலாளர்களிடமிருந்து இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. எனவே, அமைப்புசாரா தொழிலாளர்கள் இணையதளம் மூலமாக பதிவு செய்யும் இவ்வசதியினை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றனர்.” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடில் அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக தொழிலாளர் துறையின் கீழ் 17 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் இயங்கிவருகின்றன. அவை :
1. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்
2. தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியம்.
3. தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியம்
4. தமிழ்நாடு சலவை தொழிலாளர்கள் நல வாரியம்
5. தமிழ்நாடு முடித்திருத்துவோர் நல வாரியம்
6. தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் நல வாரியம்
7. தமிழ்நாடு கைவினை தொழிலாளர்கள் நல வாரியம்
8. தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியம்
9. தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியம்
10. தமிழ்நாடு காலணி, தோல் பொருள்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர்கள் நல
வாரியம்
11. தமிழ்நாடு ஓவியர் நல வாரியம்
12. தமிழ்நாடு பொற்கொல்லர் நல வாரியம்
13. தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் நல வாரியம்
14. தமிழ்நாடு வீட்டுப்பணியாளர்கள் நல வாரியம்
15. தமிழ்நாடு விசைத்தறி நெசவாளர்கள் நல வாரியம்
16. தமிழ்நாடு பாதையோர வணிகர்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும்
தொழிலாளர்கள் நல வாரியம்
17. தமிழ்நாடு சமையல் தொழிலாளர்கள் நல வாரியம் ஆகியவை தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக இயங்கிவருகின்றன.