வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள், அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகின்றன. இதில், வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டுப்லின் நகரில் நேற்று நடைபெற்றது. இதில், வங்கதேச அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இப்போட்டியில், பாகிஸ்தானை சேர்ந்த அலிம் தார், 200ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களநடுவராக செயல்பட்டார். இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் 200 போட்டிகளில் நடுவராக செயல்புரிந்த, மூன்றாவது நபர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, தென்னாப்பிரிக்காவின் ரூடி குயர்ட்சன் (Rudi Koertzen), நியூசிலாந்தின் பில்லி பவுடன் (Billy Bowden) ஆகியோர் இச்சாதனையை படைத்துள்ளனர்.
![Rudi - Billy](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3224363_na.jpg)
2000ஆம் ஆண்டில், பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்தான், அலிம் தார் நடுவராக அறிமுகமானார். நடுவரில், இவர் சிறப்பாக செயல்பட்டு வருவதால் ஐசிசி இவருக்கு 2009 முதல் 2011 ஆம் ஆண்டு வரை டேவிட் ஷேப்பர்ட் விருதை வழங்கி கௌரவித்தது.
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூலம், தொடர்ச்சியாக ஐந்தாவது முறை உலகக் கோப்பை தொடரில் நடுவராக செயல்பட உள்ளார். ஐசிசியின் உயர்மட்ட நடுவர் குழுவில் இவரும் ஒருவர். தனது 19 வருட நடுவர் பயணத்தில், அவர் இதுவரை 125 டெஸ்ட், 200 ஒருநாள், 43 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார்.