பெரம்பலூர் அருகே உள்ள செல்லியம் பாளையம் கிராமத்தில் முருகேசன் என்பவருக்குச் சொந்தமான வயல்காட்டில் கிணறு வெட்டப்பட்டுள்ளது. நேற்று (ஜூலை 12) மாலை அதே கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (27) என்பவர் சைடு போரில் தண்ணீர் வருகிறதா என்று பார்ப்பதற்காக கிணற்றுக்குள் இறங்கியுள்ளார்.
ஆனால், அவர் வெகு நேரமாகியும் மேலே வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவரை மீட்கச் சென்ற அதே ஊரைச் சேர்ந்த பாஸ்கர் (22) என்பவரும் திரும்பவில்லை. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த பெரம்பலூர் தீயணைப்பு வீரர்களான ராஜ்குமார், தனபால், பால்ராஜ் ஆகிய மூன்று பேரும் கிணற்றுக்குள் இறங்கி கிணற்றில் விழுந்த இருவரையும் தேடியபோது மயங்கிய நிலையில் இருந்த பாஸ்கரை மீட்டனர்.
மேலும், கிணற்றுக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர்களான தனபால், பால்ராஜ் ஆகியோர் மயக்கமடைந்தனர். அவர்களை கிணற்றுக்கு மேலே இருந்த தீயணைப்பு வீரர் ராஜ்குமார் மீட்க உதவி செய்தபோது அவரும் விஷவாயு தாக்கி மயங்கிவிழுந்தார்.
பின்னர் மீட்கப்பட்ட தீயணைப்பு வீரர் ராஜ்குமார் உள்பட நான்கு பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி தீயணைப்பு வீரர் ராஜ்குமார் உயிரிழந்தார்.
கிணற்றில் இறந்து கிடந்த ராதாகிருஷ்ணன் உடலை பெரம்பலூர் மற்றும் துறையூர் தீயணைப்புத் துறை வீரர்கள் மீட்டனர். இது குறித்து தகவலறிந்த காவல் துறை கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
இதையும் படிங்க:வீடு விழுந்து விபத்து... பெண் உயிரிழப்பு... கட்டப்படாத வீட்டுக்குப் பெண்ணின் பெயர் உபயோகம்!