ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் மூடப்பட்டு இருந்த டாஸ்மாக், சாராய கடைகள் சமீபத்தில் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வழக்கம்போல புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மதுவகைகள், சாராய மூட்டைகள் தமிழ்நாடு பகுதிகளுக்கு கடத்தபடுவது தொடங்கி இருக்கிறது.
இந்நிலையில் நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள அகரகடம்பனூர் கிராமத்தில் ஒருவரது வீட்டில் சாராய பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற உதவி ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர், அகரகடம்பனூர் கிராமத்தை சேர்ந்த மதியழகன் வீட்டு பின்புறத்தில் புதுச்சேரி மாநில சாராய மூட்டைகள் இருப்பதை கண்டறிந்தனர்.
பின்னர் விசாரிக்கையில் சாராய பாக்கெட்டுகளை அதே பகுதியை சேர்ந்த தேவேந்திரன் விற்பனைக்காக மதியழகன் வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து காவல்துறையினர் இருபது மூட்டைகளில் இருந்த ஆயிரம் சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் தேவேந்திரன், மதியழகன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.