இந்தியாவில் 17ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டில் நடைபெற்ற இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் காலியாக இருந்த 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, நேற்று நடைபெற்ற ஏழாம் கட்ட மக்களவைத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் மீதமிருந்த நான்கு தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது.
இதில், தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் நேற்று 72.61 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், நேற்று பதிவான வாக்குகள் கொண்ட மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் இன்று வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள தூத்துக்குடி வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அரசியல் கட்சி முகவர்கள், தேர்தல் ஆணைய பார்வையாளர் முன்னிலையில் இரண்டு பூட்டுகள் போடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியதாவது,
வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. முதலில் மத்திய துணை ராணுவ படையினர், இரண்டாவதாக ஆயுதபடை காவலர்கள், மூன்றாவதாக தமிழ்நாடு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். வாக்கு எண்ணும் மையத்தில், 24 மணிநேரமும் கண்காணிக்கப்படும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் நாளன்று வரும் வேட்பாளர்களின் முகவர்கள் அந்தந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டு தான் செல்ல வேண்டும்.
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு நாளை பயிற்சி அளிக்கப்படும். தொகுதிவாரியாக வாக்குகள் எண்ணப்படுவதற்கு ஏதுவாக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் தபால் வாக்குகள் மற்றொரு அறையில் எண்ணப்படும். மக்களவைத் தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் தேர்தல் அலுவலர் முன்னிலையில் எண்ணப்படும். வேட்பாளர்கள் ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு முகவரை நியமிக்கலாம். காலை எட்டு மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
மின்னனு வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிந்த பின், வி.வி.பேட் இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு, மின்னனு வாக்கு பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிடப்படும் எனக் கூறினார். இச்சந்திப்பின் போது, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா உடனிருந்தார்.