இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "பெருமை மிகுந்த நம் நாட்டின் 74ஆவது சுதந்திர தினத்தில் அனைவருக்கும் எனது இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் இன்றைக்கு சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காக தங்களுடைய சுக, துக்கங்களை மறந்து போராடி, அதனால் எண்ணிலடங்காத துயரங்களைச் சந்தித்த மாவீரர்களையும், மாபெரும் தியாகிகளையும் இந்நாளில் நெஞ்சம் நிறைந்த நன்றியோடு நினைத்து வணங்கிடுவோம்.
அத்துடன் நம் மூதாதையர் உயிர், உடல், பொருள் எல்லாம் இழந்து பெற்றுத்தந்த சுதந்திரத்தைப் பேணிக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருப்பதையும் மறந்துவிடக்கூடாது. விடுதலையின் அடிநாதமான ஜனநாயகத்தைச் சேதாரமின்றி காப்பாற்ற வேண்டியது நம் கடமையாகும். அதிலும் விடுதலைக்காக முதல் அடி எடுத்து வைத்து இந்தியாவுக்கே வழிகாட்டிய சிறப்புமிக்க தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் அந்தக் கடமை கூடுதலாகவே இருக்கிறது.
ஏனெனில், வெவ்வேறு இனம், மொழி, பண்பாடு, கலாசாரம் கொண்ட இந்திய தேசத்தின் உயிரோட்டமே அதன் ஜனநாயகத்தில்தான் அடங்கியிருக்கிறது. 'எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்' என்ற எண்ணத்தோடு ஜனநாயகத்தின் பாதையில் பயணித்து, அனைத்து தரப்பு மக்களும் சமூக மற்றும் பொருளாதார ரீதியிலும் சமத்துவம் பெறுவதற்கு ஒன்றுபட்டு உழைத்திடுவோம்.
ஒரு தமிழனாக நம்முடைய தனித்துவமான உரிமைகளை விட்டுக்கொடுக்காமல், இந்தியனாக உலக அரங்கில் தலைநிமிர்ந்து நின்றிடவும் இந்த சுதந்திரத் திருநாளில் உறுதி ஏற்றிடுவோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.