தமிழ்நாடு முழுவதும் 39 ஐபிஎஸ் அலுவலர்களை இடமாற்றம் செய்து உள்துறை செயலர் உத்தரவிட்டார். அந்த வகையில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக (ஐ.ஜி) இருந்த அமல்ராஜ் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையராக பணியாற்றிவந்த ஜெயராம் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர் நாகை ஆகிய எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி மத்திய மண்டலத்திற்கு காவல்துறை தலைவராக ஜெயராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவராக (டிஐஜி) இருந்த பாலகிருஷ்ணன் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக மதுரை சரக காவல்துறை துணைத் தலைவராக பணியாற்றிவந்த ஆனி விஜயா திருச்சி சரக டிஐஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி காவல் சரகம் துணைத் தலைவராக ஆனி விஜயா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல் திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக பணியாற்றிவந்த வரதராஜூ நேற்று (ஜூன் 30) ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து அவர் திருச்சி மத்திய மண்டல ஐஜி ஆக இருந்த அமல்ராஜிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு பணியிலிருந்து விலகினார்.
இந்நிலையில், தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவராக பணியாற்றி வந்த லோகநாதன் காவல்துறை துணைத் தலைவராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த வகையில் திருச்சியை தலைமையிடமாக கொண்டு பணியாற்றி வந்த மூன்று காவல்துறை உயர் அலுவலர்கள் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.