உலக யோகா தினத்தை முன்னிட்டு “ஆரோக்கிய வாழ்விற்கு யோகா” எனும் தலைப்பில் மெய்நிகர் பயிலரங்கம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆன்மிக மற்றும் யோகா அறிவியல் மையம் சார்பில் நடைபெற்றது. அப்போது ஆன்மிக மற்றும் யோகா அறிவியல் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுந்தரராமன் வரவேற்றார்.
துணைவேந்தர் மணிசங்கர் தலைமை வகித்துப் பேசுகையில், "ஆரோக்கியமான வாழ்க்கையின் ரகசியமாக யோகா இருக்கிறது. குறிப்பாக, மாணவர் சமூகத்திற்கு பல முக்கியமான முன்னெச்சரிக்கைகள், வாழ்க்கை முறை சிக்கல்களை தடுப்பதற்கு யோகா பயன்படுகிறது" என்றார்.
பின்னர், சிறப்பு விருந்தினரான யோகா குரு டிஆர்ஜி கவுதமன், யோகாவை கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தைக் குறித்து உரையாற்றினார். அனைத்து அடிப்படை யோக நடவடிக்கைகளையும் சரியான குரு மூலம் கற்றுக்கொள்வது எப்படி என்பதையும் அவர் விளக்கினார். மாணவர்கள், ஊழியர்கள் மற்ற அனைவரும் தங்களது உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்த யோக பயிற்சி எவ்வாறு உதவுகிறது என்பதை வலியுறுத்தினார்.
யோகா பற்றிய அறிமுகத்திற்குப் பிறகு, உட்கார்ந்த நிலை, நிற்கும் நிலை, படுக்கும் நிலை போன்ற பல அடிப்படை ஆசனங்களை அவர் செய்து காண்பித்தார். எந்த வயதினரும் இப்பயிற்சியினை செய்யலாம் என்றும், இப்பயிற்சியின் பயன்கள் குறித்தும் விளக்கினார்.
இந்நிகழ்ச்சியில், யோகா குரு கவுதமனுக்கு சிறந்த யோகா ஆசிரியர் விருதினை துணைவேந்தர் மணிசங்கர் வழங்கினார்.
இதையடுத்து, பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் கோபிநாத் பேசுகையில், "பல்கலைக்கழக பணியாளர்கள், மாணவர்கள் பயன்பெற யோகா பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படும்" என்றார்.
இதையும் படிங்க: நாயுடன் இணைந்து யோகா செய்யும்சமந்தா!