கரூர் மாவட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், 5 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வழங்குவதாக அரசு ஆணை வெளியிடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, இன்று (ஆகஸ்ட் 4) கரூர் மாவட்டத்தில் உள்ள இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை, இலங்கை அகதிகளுக்கான முதியோர் உதவித்தொகை உட்பட ஒரே நாளில் 1,266 பேருக்கு சுமார் 6 கோடியே 73 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள உதவித் தொகைகளை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.
பின்னர் உதவித்தொகை பெற்ற பயனாளிகளிடம் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், "தமிழ்நாட்டில் மிகக்குறைந்த அளவில் உதவித்தொகை பெற்ற மாவட்டங்களில் கரூர் மாவட்டமும் ஒன்று. அதனை மாற்றும் விதமாக தற்போது, கரூர் மாவட்டத்தில் 41 ஆயிரம் பேருக்கு முதியோர், விதவைகள் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இன்று கரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 1,266 பேருக்கு உதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.