கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு பேருந்துகளின் இயக்கம் அன்று முதல் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு கடந்த மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் முழுமையான ஊதியம் வழங்கப்பட்டது.
தற்போது, மே மாதத்திற்கான ஊதியத்தில் குறிப்பிட்ட விழுக்காட்டினருக்கு பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர், ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில், குறிப்பிட்ட விழுக்காடு தொழிலாளர்களுக்கு மட்டும் மே மாத ஊதியத்தில் பிடித்தம் செய்ததை கண்டித்தும் உடனடியாக முழு ஊதியத்தை அவர்களுக்கு வழங்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.
இதற்கிடையே நாளை 50 விழுக்காடு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், புதுக்கோட்டையில் அண்ணா தொழிற்சங்கத்தை தவிர மற்ற தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் போக்குவரத்து கழக பணிமனை முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.