ஆணவக் கொலைசெய்யப்பட்ட உடுமலை சங்கர் விவகாரத்தின் மேல் முறையீட்டு வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. முக்கியக் குற்றவாளி என குற்றஞ்சாட்டப்பட்ட கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி வழக்கிலிருந்து கடந்த 22ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றத்தால் விடுதலைசெய்யப்பட்டார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர் ஊடகங்களிடையே பேசிய தமிழ்நாடு அரசுத் தரப்பின் கூடுதல் வழக்குரைஞர் எமிலியாஸ், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல்செய்துள்ளார். அதில், "எனது விடுதலையை எதிர்த்து யார் மனு தாக்கல்செய்தாலும், எனது தரப்பையும் விசாரிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
ஆணவக் கொலை வழக்கிலிருந்து விடுதலைசெய்யப்பட்டவர்களின் விடுதலையை எதிர்த்து நான் வழக்குத் தொடர்வேன் என்று அவரின் மகளும் கொலைசெய்யப்பட்ட சங்கரை காதல் திருமணம் செய்தவருமான கௌசல்யா கூறியிருந்ததது குறிப்பிடத்தக்கது.