தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் நவீனமயமாக்கப்பட்டுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வங்கி கட்டடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு நவீனமயமாக்கப்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க வங்கி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வினை அடுத்து 504 பயனாளிகளுக்கு இரண்டு கோடியே 10 லட்சம் கடன் உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "தற்போது ஊரடங்கு நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியிட்டால் தான் அதிகம் கூட்டம் வரும்.
இந்தக் காலகட்டத்தில் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் வெளியிட வாய்ப்பு உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. திரையரங்குகளில் பெரிய பட்ஜெட், சின்ன பட்ஜெட் என்ற ரீதியில் பாகுபாடு பிரித்து திரையிடுவதற்கு அரசு அனுமதி வழங்க முடியாது.
அதில் தலையிடவும் முடியாது. அதற்கென திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் என பல சங்கங்கள் உள்ளன. அதில் பதிவு பெற்றவர்கள் எந்த படத்தை எந்தெந்த தேதியில் வெளியிட வேண்டும் என்று வரைமுறை வைத்து வெளியிடுகின்றனர்.
இதில் திரைப்படத்தை வெளியிடுவது அவர்கள் கொள்கையாக வைத்துள்ளார்கள். இதுதான் நடைமுறை வழக்கமாக உள்ளது. தற்போது சின்னத்திரை படப்பிடிப்புக்கு முன்னர் குறைவான ஆள்களை வைத்து படப்பிடிப்பை இயக்க அனுமதி அளித்தும் தற்போது 60 பேருக்கு மேல் பணியாளர்கள் வைத்து சின்னத்திரை படப்பிடிப்பை தொடங்க அனுமதிக்க வேண்டுமென சின்னத்திரை தயாரிப்பாளர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று தற்போது அதற்கும் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதேபோல் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகள் அறிவிக்கப்படும்" என்றார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட திட்ட அலுவலர் தனபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.