உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட அபாய நிலையை எட்டியிருக்கும் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாட்டளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு 2 ஆயிரத்து 37 பேர் பாதிக்கப்பட்டும், 31 பேர் உயிரிழந்தும் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகாரித்துவரும் கோவிட்-19 பாதிப்பைக் கட்டுபாட்டிற்குள் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருப்பதி போன்ற பகுதிகளிலிருந்து திருவள்ளூருக்கு அனுமதியின்றி, தடையை மீறியை இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களில் மதுபானங்களை வாங்க வருவோராலும் இந்த பாதிப்பு அதிகரித்து வருவதாக அறிய முடிகிறது.
இதைத் தடுக்கும் வகையில் தற்போது மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து சோதனைகளை கடுமையாக்குமாறு காவல்துறை துணை கண்காணிப்பாளர் பவன் குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை அடுத்து, திருவள்ளூர் முழுவதும் 20 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, காவல்துறையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
பிற மாவட்டங்களை சேர்ந்த வாகனங்கள் உள்ளே வர அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன. கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை பொன்னேரி, மீஞ்சூர், திருப்பாலைவனம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 7,500 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.