தமிழ்நாட்டில் கரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் வரும் 15ஆம் தேதி முதல் 26ஆம் தேதிவரை நடைபெறும் எனவும், 11ஆம் வகுப்பில் நடைபெறாத ஒரு தேர்வு வரும் 16ஆம் தேதி நடத்தப்படும் எனவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் தேர்விற்கான நுழைவுச்சீட்டு இன்றும், நாளையும் மாணவர்கள் பயிலும் பள்ளியில் வழங்கப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் 28 ஆயிரத்து 33 மாணவர்கள் தேர்வை எழுத உள்ளனர்.
இவர்களுக்காக ஏற்கனவே 133 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்ட நிலையில் கரோனா தொற்று காரணமாக தகுந்த இடைவெளிக்காக ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத உள்ளதால் தேர்வு மையங்கள் எண்ணிக்கை 311ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மாணவ மாணவிகளுக்கு ஹால் டிக்கெட்டுடன் இரண்டு முகக்கவசங்கள் தற்போதே வழங்கப்படுகின்றன. மேலும், தேர்வு எழுத வரும் மாணவர்களில் தொற்று அறிகுறி கண்டறியப்பட்டால் அவர்கள் தேர்வு எழுதுவதற்காக மாவட்டததில் 9 தனி மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு அறையில் 5 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதுவர்.