திருவாரூர் மாவட்டத்தில், கரோனாவால் 32 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர். ஆனால், சென்னையில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்கிருந்து சொந்த மாவட்டங்களுக்கு பொதுமக்கள் பலர் ஊர் திரும்பும் சூழ்நிலை உருவானது.
இதனிடையே, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பலர் சென்னையில் வேலை பார்த்து வந்தனர். இதேபோல், வெளி மாநிலங்களில் வேலை பார்த்து வந்தவர்கள் தற்போது தங்களது சொந்த மாவட்டமான திருவாரூக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வருபவர்களை சுகாதாரத்துறை ஊழியர்கள் பரிசோதனை செய்யும் பொழுது திருவாரூரில் நாளுக்கு நாள் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் கூடூர் கிராமத்தைச் சேர்ந்த தாய், அவரது 7 வயது மகன் ஆகியோர் சென்னைக்கு சென்று ஊர் திரும்பினர்.
அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மன்னார்குடியை அடுத்த பாமணி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மூவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, திருவாரூரில் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 87ஆக உயர்ந்துள்ளது. மேலும், 46 பேர் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.