ஊரடங்கு தளர்வுக்கு பிறகு நாடு முழுவதும் கரோனோ பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்தவகையில் தென்காசி மாவட்டத்தைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் கரோனோ பாதிப்பு இல்லாத மாவட்டமாக இருந்த்து.
பின்னர் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மூலம் தென்காசி மாவட்டத்திலும் கரோனா தொற்று காணப்பட்டது. தொடர்ந்து புளியங்குடி பகுதியில் ஒரு தெரு முழுவதும் கரோனோவால் பாதிக்கப்பட்டதால் அப்பகுதி பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாவட்டத்தின் பட்டியலில் இணைந்த தென்காசியில் நாளுக்குநாள் பாதிப்பு எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் வரை தென்காசியில் சுமார் 40 பேர் மட்டுமே கரோனோவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மே நான்காம் தேதிக்கு பிறகு ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை விதித்த நிலையில் வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் தென்காசி மாவட்டத்திற்கு வரத்தொடங்கினர். இதன் மூலம் தென்காசி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.
குறிப்பாக மகாராஷ்டிரா, சென்னை உள்ளிட்ட அதிகம் பாதிக்கப்பட்ட ஊர்களில் இருந்து வந்தவர்களுக்கு கரோனோ தொற்று உறுதியானது. தினமும் சராசரியாக 5 பேர் கரோனோவால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் கரோனோ பாதிப்பு சதத்தை தாண்டியுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 103 பேர் கரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் 88 பேர் குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 4,750 பேர் வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ளனர். 4471 பேர் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 7612 பேருக்கு கரோனோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.