தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தருமபுரி மாவட்டத்தில் தொற்று பாதிப்பு படிப்படியாக அதிகரித்து 100 ஐ தொட்டுள்ளது.
இதனை தடுக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரூர் அடுத்த தீர்த்தமலையில் உள்ள பிரசித்திப் பெற்ற தீர்த்தகிரி ஈஸ்வரர் திருக்கோயிலுக்கு அருகே சிறு வியாபாரிகள் சிலருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த சிலருக்கும் தொற்று பரவியது. கரோனா தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்காக தீர்த்தமலை பகுதியில் வணிகர்கள் கடையடைத்து, ஒரு வாரமாக சுய ஊரடங்கை கடைப்பிடித்தனர்.
இதனையடுத்து தீர்த்தமலை கோயிலுக்கு செல்லவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில ஒரு வாரத்திற்கு பிறகு, ஊரடங்கை முடித்து வணிகர்கள் வழக்கம்போல் கடைகளை திறந்துள்ளனர்.
ஆனாலும் தொற்று பரவலைத் தடுக்க, முகக்கவசம் அணிந்தும், தகுந்த இடைவெளியை கடைப்பிடித்தும், வணிகர்கள் தடுப்பு விதிகளை பின்பற்றி வருகின்றனர்.