கோவை முத்தண்ணன் குளம் பகுதியில் சிறுவர்கள் சிலர் பந்தை வைத்து விளையாடிக்கொண்டிருந்தபோது, அவர்கள் வைத்திருந்த பந்து குளத்தில் விழுந்து விட்டது. குளத்தில் விழுந்த பந்தை எடுக்க முடியாமல் சிறுவர்கள் பார்த்துக்கொண்டிருந்தபோது, அப்பகுதியாக வந்த நபர் குளத்தில் இறங்கி பந்தை எடுத்துத் தருவதாகக் கூறி முத்தண்ணன் குளத்தில் இறங்கியுள்ளார்.
ஆனால், அவர் இறங்கிய பகுதி மிகவும் ஆழமாகவும், சேறும்சகதியுமாகவும் இருந்ததால் நீருக்குள் மூழ்கினார். நீண்ட நேரமாக அவர் வெளியில் வராததால், அந்தச் சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள மக்களிடம் தெரிவித்துள்ளனர். அப்பகுதி மக்கள் காவல் துறையினரிடம் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த காவல் துறையினர், மீட்புப் படையினர், நீண்ட நேரம் தேடி அவரது உடலை மீட்டனர்.
இறந்தவர் குறித்து விசாரிக்கும்போது, அவர் தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த திவான் ராஜ் (39) என்பது தெரியவந்தது. அதன்பின் காவல் துறையினர் அவரது உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து ஆர்எஸ் புரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.