ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், மாவட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர் அல்லி, மருத்துவ பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் பங்கேற்று உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
அதன்பிறகு பேசிய மாவட்ட ஆட்சியர், “கடந்த நூறு நாள்களுக்கும் மேலாக மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் கரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்” என்றார்.
இதையடுத்து அவர் அங்கிருந்து கிளம்பும் வேளையில், மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர் ஆக பணிபுரிந்து வரும் பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் அழுதவாறு தனது தாய்க்கு கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் வாரம் இரு முறை டயாலிஸிஸ் செய்துகொள்ள வேண்டும். அது முறையாக வழங்கப்படவில்லை. எனது தாயிடம் தொலைபேசி இல்லாததால் அவரின் நிலை என்ன என்பது குறித்து தெரியாத சூழல் நிலவுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து, அவருக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என்று அழுதவாறே கோரிக்கை விடுத்தார்.
இதைத்தொடர்ந்து, உடனடியாக மாவட்ட ஆட்சியர் மருத்துவர்களை அழைத்து இதுகுறித்து விசாரணை செய்த பிறகு எதனால் அவ்வாறு சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும், அந்தப்பெண்ணின் தாய்க்கு சரியாக சிகிச்சை வழங்குமாறும், அந்த பெண் பணியாளரை கரோனா வார்டில் உள் சென்று தாயை பார்த்து வருவதற்கு பாதுகாப்பு உடை வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.
மேலும் அந்தப் பெண்ணிற்கு கரோனா சிறப்பு வார்டிலேயே தாயைப் பார்த்துக் கொள்ளும் விதத்தில் பணி வழங்க வேண்டும் என்றும் கூறி சென்றார். மருத்துவமனை வளாகத்தில் ஆட்சியர் முன் மருத்துவமனை ஊழியர் அழுத சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 3,965 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி