நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 500க்கும் மேற்பட்டோர் வாடகை டாக்ஸி, வேன் ஓட்டுநர்களாக உள்ளனர். இவர்கள் நிதி நிறுவனத்தில் பணம் பெற்று வாகனங்களை வாங்கி வாடகைக்கு இயக்குவதன் மூலம் வருமானம் ஈட்டிவந்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு காரணமாக இவர்களது தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடனை கட்ட முடியாமலும், அன்றாட உணவிற்கே சிரமப்படும் நிலையில் உள்ளதாக டாக்சி ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை கேணிக்கரை பகுதியில் வசித்துவந்தவர் ஆழ்வார் ரவி. ஓட்டுநரான இவர், டாக்ஸி வைத்து தொழில் நடத்திவந்தார். கரோனா ஊரடங்கால் போதிய வருமானம் இல்லாமல் வாகனத்திற்கான கடனை கட்ட முடியாத சூழலில் வறுமையில் இருந்துவந்துள்ளார்.
இந்நிலையில், குடும்ப கஷ்டத்திற்காக அவரது மனைவி தமிழரசி வீட்டு வேலைக்குச் சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த ரவி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து புகாரின்பேரில் மயிலாடுதுறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிதி நிறுவனத்தில் மாத தவணை கட்டமுடியாத சூல்நிலையால் ஓட்டுநர்கள் நெருக்கடிக்கு உள்ளாவதாகவும், போதிய வருமானம் இல்லாமல் மனைவி மற்றும் ஐந்து வயது மகளை தவிக்கவிட்டு தற்கொலை செய்துகொண்ட ரவியின் குடும்பத்திற்கு, தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று டாக்சி ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:பணத்தை வாங்கிட்டு எல்லாரும் என்னை ஏமாத்துறாங்க’ - தற்கொலை செய்து கொண்ட பெண் காவலரின் வாக்குமூலம்!