தஞ்சாவூர் பட்டுக்கோட்டை அருகே உள்ள பண்ணைவயல், கோட்டாகுடி ஆற்றில் தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெறுவதாகப் புகார் வந்தது. இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அருள்பிரகாசம் தலைமையில், இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது மணல் ஏற்றிக் கொண்டு வந்த லாரியைப் பிடித்தனர். இருப்பினும், லாரி டிரைவர் லாரியில் இருந்து குதித்துத் தப்பிச் சென்றுவிட்டார். இதையடுத்து பிடிபட்ட லாரி, வட்டாட்சியர் அலுவலகத்துக்குக் கொண்டு சென்று நிறுத்தி வைக்கப்பட்டது.
வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த லாரி, அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டதால், அச்சம்பவம் பட்டுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வட்டாட்சியர் அருள்பிரகாசம், பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அப்புகாரின் அடிப்படையில் திருடப்பட்ட லாரியைக் கண்டுபிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவின் பேரில், உதவி துணை கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் மற்றும் பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் பெரியசாமி ஆகியோர் குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்களின் செல்போன் எண்களை வைத்துக் காவல் துறையினர் கண்காணித்தனர். அதன் அடிப்படையில் குற்றவாளிகள் சிவகங்கை மாவட்டம், கல்லல் பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்ற தென்னரசு தலைமையிலான காவல்துறையினர் முத்து சரவணன், பூமிநாதன், விஜய் மற்றும் அஜித் ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்.
அத்துடன் அவர்களிடம் இருந்த லாரியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வர்த்தக சங்கத் தலைவரைத் தாக்கிய காவலர் இடமாற்றம்