தூத்துக்குடி சாத்தான்குளம் விவகாரத்தை தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறை மேல் பலர் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் காவலர்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய பல நிகழ்வுகள் தொடர்ச்சியாக வெளிச்சத்திற்கு வர தொடங்கியுள்ளன.
இவ்வாறு சில காவலர்கள் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த காவல்துறைக்கு கலங்கம் ஏற்படுவதால் இதை சரி செய்வதற்கு தமிழ்நாடு காவல்துறை முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது.
அதன்படி தமிழ்நாடு காவல்துறையில் பொதுமக்களிடம் மோசமாக நடந்து கொண்ட காவலர்கள், அலுவலர்களிடம் மோசமாக நடந்து கொண்ட காவலர்கள், மன அழுத்தத்தில் உள்ள காவலர்கள் என பட்டியில் தயார் செய்து அவர்களுக்கு ஆலோசனை வழங்க தமிழ்நாடு காவல்துறை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில், மக்களிடம் அத்துமீறியதாக 80 காவலர்கள் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான அறிவாற்றல் நடத்தை சிகிச்சையான CBT (Cognitive Behavioral Therapy) முடித்து அதில் தேர்ச்சி பெற்ற பின்னரே அவர்கள் மீண்டும் பணிகளில் அமர்த்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
இந்த முறை இனி தமிழ்நாடு முழுவதும் பின்பற்றப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.