திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் தனது தோட்டத்தில் மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை சுஜித், நம்மை விட்டு இவ்வளவு சீக்கிரம் பிரிவார் என்று யாரும் நினைத்திருக்கமாட்டோம்.
ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியிருந்த சுஜித்தை மீட்க 80 மணி நேரத் தொடர் போராட்டம் நடைபெற்றது. ஆனாலும் சுஜித்தை உயிருடன் மீட்க முடியவில்லை. பல மணி நேரம் நீடித்த சுஜித் மீட்புப் போராட்டத்தில் பல தன்னார்வலர்களும் பங்கேற்றனர். அப்படிப் போராடிய தன்னார்வலர்களில் ஒருவர்தான் நாமக்கல் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்.
நமது ஈடிவி பாரத் செய்திக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில், "சுஜித்தை உயிரோடு மீட்க முடியாதது என் மனதில் ஆறாத ரணமாக உள்ளது. மீட்புப் பணி கடும் சவால் நிறைந்ததாக இருந்தது. மேலும் நான் உருவாக்கிய கருவியால்தான் சிறுவன் இரு நாள்களாக அதே இடத்தில் நிலைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தான்.
2012இல் நான் வடிவமைத்த மீட்புக் கருவி சென்னை ஐஐடியால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல தன்னார்வலர்களும் மீட்புக் கருவிகளை உருவாக்கியுள்ளனர். ஆனாலும் இதில் உள்ள நிறை குறைகளை ஆராய்ந்து அரசு இதனை மேம்படுத்தினாலே எளிதாக ஆழ்துளைக் கிணற்றிலிருந்து குழந்தைகளை மீட்க முடியும்.
மேலும், ஆழ்துளைக் கிணற்றில் குழந்தைகள் யாரேனும் தவறி விழும் பட்சத்தில் உடனடியாக தகவல் அளித்து விரைந்து சம்பவ இடத்திற்கு வர அரசின் சார்பில் ஏற்பாடு செய்தாலே உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்" என்று தெரிவித்தார்.
குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து நான்கு மணி நேரத்துக்கு பிறகே தெரியவந்ததாகவும் முன்னரே தகவல் கிடைத்திருந்தால் சுஜித்தை காப்பாற்றியிருக்க முடியும் எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: அனைத்து சமூக சிக்கலையும் கல்வி மூலம் மாற்றலாம் - வானவில் ரேவ