நாகை மாவட்டத்தில் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்நிலையில், நாகை காவல் துறை தொலைத்தொடர்பு அலுவலகத்தில் பணியாற்றிவந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நாகை நீதிமன்றம் அருகே உள்ள காவல் தொலைத்தொடர்பு அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அந்த அலுவலகத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப காவலர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டத்தில் இதுவரை காவல் தொலைத்தொடர்பு, ஆயுதப்படை, அதிவிரைவுப் படை, ஊர்க்காவல் படை ஆகியவற்றில் பணிபுரிந்துவந்த எட்டு காவலர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.