மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உள்பட்ட பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் தொடர்ந்து மாயமாகி வருகின்றனர். அவர்களில் பலர் கண்டுபிடிக்கப்படாமலேயே உள்ளனர். சிலர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பல வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இரண்டு வருடங்களில் நடந்த 8 வழக்குகளை சுட்டிக்காட்டி வழக்கறிஞர் சங்கமித்திரன் என்பவர் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு புகார் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக இந்த புகாரில் மயிலாடுதுறை அருகே திருவாளபுத்தூரில் தூய்மைப் பணியாளரின் 14 வயது மகள் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அண்மையில் அவருக்கு குழந்தை பிறந்த சம்பவத்தில் சில குற்றவாளிகள் மட்டும் கைது செய்யப்பட்டனர். முக்கிய பிரமுகர்கள் பலர் தப்பித்து இருப்பது உள்ளிட்ட வழக்குகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்குகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அதன் மீதான விரிவான அறிக்கையையும், சிபிசிஐடிக்கு வழக்குகளை மாற்றுவது குறித்த குறிப்புரையையும் அனுப்பும்படி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்துக்கு, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய செயலாளர் ஆர்.லால்வேனா ஐ.ஏ.எஸ். கடிதம் அனுப்பியுள்ளார்.