தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்களின் பீகார், ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல்வேறு வேலைகளைச் செய்துவந்தனர். ஊரடங்கால் கடந்த 40 நாள்களாக அவதிப்பட்டு வந்த அவர்களை, தற்போது அவர்வர் ஊர்களுக்குத் திரும்ப மே 7 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்களை மத்திய அரசு இயக்கத் தொடங்கியுள்ளது.
இதனையடுத்து வெளிமாநிலத் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் பணிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முன்னெடுத்து வருகின்றன. அதன்பேரில், தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் பீகார், ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
எஞ்சியுள்ள வடமாநில தொழிலாளர்களையும் இரண்டாம் கட்டமாக அவர்களின் சொந்த மாநிலத்துக்கு அனுப்பும் வகையில் இன்று (ஜூன்.1) தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் தூத்துக்குடியிலிருந்து பீகார் செல்லும் சிறப்பு ரயில் மூலமாக அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ரயில் நிலையத்தில் அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு சொந்த ஊர் திரும்புவதற்கான பயணச்சீட்டு, இருக்கை அனுமதிக்கான டோக்கன் வழங்கப்பட்டன. அவர்களுக்குத் தேவையான உணவுகளும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில் மணியாச்சி, மதுரை, சேலம் வழியாக இரண்டு நாட்களில் பீகாரை சென்றடையும் என ரயில்வே துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தப் பணிகளை ஆய்வு செய்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,"தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பீகாருக்கு இயக்கப்படும் ஷார்மிக் சிறப்பு ரயில் மூலமாக 1,584 வடமாநிலத் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊருக்குத் திரும்புகின்றனர்.
இதில் தூத்துக்குடி (521 பேர்), திருநெல்வேலி (206 பேர்), கன்னியாகுமரி (1086 பேர்) மற்றும் விருதுநகர் ஆகிய நான்கு தென் மாவட்டங்களில் பல்வேறு பணிகளை செய்துவந்த வடமாநிலத் தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் அவரவர் ஊர்களுக்கு செல்கின்றனர். மேலும், வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் சிக்கித்தவித்து வரும் இந்தியார்களை தாயகம் அழைத்து சென்றிருக்கும் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ் ஜலஸ்வா கப்பல் நாளை(ஜூன்.2) தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு வருகிறது.
அதில், இலங்கையில் சிக்கித்தவித்த தமிழர்கள் உள்பட இந்தியாவைச் சேர்ந்த 990 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனையொட்டி, கப்பலில் வருகிறவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தவும், தேவைப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதைபோல அடுத்து 7ஆம் தேதி மாலத்தீவிலிருந்தும், 17ஆம் தேதி ஈரானிலிருந்தும் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கப்பல் வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தால் சீராக செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் வெளிமாநிலத்தில் இருந்தால், இ-பாஸ் மூலம் பதிவு செய்யலாம். அவர்களை தூத்துக்குடிக்கு அழைத்துவர உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்" என்றார்.