ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள சிப்காட் தொழிற்பேட்டை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் செயல்பட்டுவருகிறது. இந்தத் தொழிற்பேட்டையில் 500-க்கும் மேற்பட்ட பல தரப்பு தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன.
இந்தத் தொழிற்சாலைகளில் உள்ளூர் தொழிலாளர்களைத் தவிர, பெரும்பான்மையானோர் வடமாநிலத் தொழிலாளர்கள் தொழிற்சாலை வழங்கியுள்ள விடுதிகளில் தங்கியபடி பணிபுரிந்து வருகின்றனர். சிப்காட்டில் பலதரப்பு தொழிலாளர்களும் தங்கியுள்ளதால் தொழிலாளர்களுக்கிடையே தகராறு, பெண்களிடம் வழிப்பறி, பணி முடிந்து வீடு திரும்பும் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள், திருட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்ற நடவடிக்கைகள் அதிகரித்துவருகின்றன.
பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு பாதுகாப்புகளை வழங்கிடவும், அதிகரித்துவரும் குற்ற நடவடிக்கைகளைத் தடுத்திடவும், சிப்காட் தொழிற்பேட்டையைக் கண்காணித்திடவும் அந்நியர்கள் நுழைவதைத் தடுத்திடவும் தொழிற்பேட்டை நிர்வாகத்தின் சார்பில் காவல் துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் சிறப்பு ரோந்து வாகனமொன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், ”இந்த ரோந்து வாகனம் 24 மணி நேரமும் சிப்காட் தொழிற்பேட்டைக்குள் அனைத்துப் பகுதிகளுக்கும் ரோந்துப் பணியை மேற்கொள்ளும். ரோந்து வாகனத்திலிருக்கும் தனியார் பாதுகாவலர்கள் கண்காணிப்பை மேற்கொள்வதுடன் குற்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் உடனடியாக பெருந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைப்பார்கள்.
மேலும் ரோந்து வாகனத்திற்காக மூன்று ஓட்டுநர்களும், பகல் நேரத்தில் ஒரு பாதுகாவலரும், இரவு நேரத்தில் ஒரு பாதுகாவலர் என பணியாற்றி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தினை கண்காணிப்பார்கள். சிறப்பு ரோந்து வாகனப் பணி சிறப்பாக நடைபெற்றிட தொழிற்பேட்டை தொழிற்சாலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்” என்றனர்.